புதுடில்லி: 'நாடே கொரோனாவுக்கு எதிரான போரில் பங்கேற்றிருக்கும் போது, அரசியல் பிளவுகளை உண்டாக்கி ஏதாவது செய்ய வேண்டிய சந்தர்ப்பம் இதுவல்ல' என காங்., தலைவர் சோனியாவை, மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சாடினார்.
கொரோனா பரவலை தடுக்க இந்தியாவில் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை விமர்சித்துள்ள காங்., தலைவர் சோனியா, திட்டமிடப்படாத ஊரடங்கு உத்தரவால், லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தேவையில்லாத குழப்பமும் வேதனையும் ஏற்பட்டுள்ளது என விமர்சித்தார்.
இந்நிலையில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: கொரோனாவுக்கு எதிரான போரில், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நாடு போராடி வருகிறது. பல்வேறு சிரமங்கள் இருந்த போதிலும், நாட்டு மக்கள் ஊரடங்கை முழுமனதுடன் வரவேற்றுள்ளனர்.
நாடு இத்தகைய ஒற்றுமையை காட்டும் நேரத்தில், காங்., தலைவர் சோனியா ஊரடங்கை விமர்சித்துள்ளது தேவையில்லாதது. அரசியல் பிளவுகளை உருவாக்கி, ஏதாவது செய்ய வேண்டிய சந்தர்ப்பம் இதுவல்ல. இவ்வாறு அவர் கூறினார்.