டில்லி மாநாட்டில் பங்கேற்ற 70 வெளிநாட்டினர் பீகாரில் பிடிப்பட்டனர்

பாட்னா: டில்லி மாநாட்டில் பங்கேற்ற 70 வெளிநாட்டு மதகுருக்கள் பீகாரில் பிடிப்பட்டனர்.கொரோனா வைரஸ் தொற்று நோய் உலகையே உலுக்கி வந்தாலும், இந்தியாவில் தற்போது அதிகளவு தொற்று பரவக் காரணமாக கருதப்படும் டில்லி நிஜாமுதீன் மசூதியில் நடந்த மத வழிபாட்டில் பங்கேற்றவர்களால் தான் அதிகளவு அச்சம் ஏற்பட்டுள்ளது.
மாநாட்டில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் மற்றும் வெளிநாட்டினர் என பலர் பங்கேற்றுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால், மாநாட்டில் பங்கேற்றவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்க மாநில அரசுகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. ஆனால், அதில் சிலர் மட்டுமே அடையாளம் காண முடிந்தது எனவும், பலரை தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் கூறப்படுகிறது.


இதனால், மாநாட்டில் பங்கேற்றவர்கள் அனைவரும் தாமாக முன்வந்து பரிசோதனை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன. இதுவரை இவர்களுடன் தொடர்பில் இருந்த 9 ஆயிரம் பேர் மற்றும் 1300 வெளிநாட்டவர்கள் கண்டறியப்பட்டனர். இதில் பீகாரை சேர்ந்த 86 பேர் டில்லியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பீகாரிலும் வெளிநாட்டினர்களை தேடும் பணி தீவிரமாக்கப்பட்டது.
இந்நிலையில், பீகாரில் மாநாட்டில் கலந்து கொண்ட 70 வெளிநாட்டு மதகுருக்களை கண்டுபிடித்து தனிமைப்படுத்தினர். இவர்கள் அனைவரும் கிட்டத்தட்ட 3 மாதங்களாக இந்தியாவில் பல மாநிலங்களில் பயணம் மேற்கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால், அவர்கள் எங்கெங்கு பயணம் செய்தனர் என்ற தகவல் வெளியாகவில்லை. இதனால், அவர்கள் பயணித்த பகுதிகளில் எல்லாம் கொரோனா தொற்று பரவியிருக்கலாம் என அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.