புதுடில்லி: டில்லியில் மார்ச் முதல் வாரத்தில், ‛தப்லீக் ஜமாஅத்' என்னும் இஸ்லாமிய மாநாடு நடைபெற்றது. இதில் 2000க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் பங்கேற்றனர். மூத்த மத குருக்கள் உட்பட சிலர் சவுதி அரேபியா, மலேசியா மற்றும் இந்தோனேஷியா போன்ற நாடுகளில் இருந்து வந்தவர்களும் பங்கேற்றுள்ளனர். மாநாடு முடிவடைந்ததும், பங்கேற்பாளர்கள் பல்வேறு மாநிலங்களுக்கு புறப்பட்டனர். அவர்களில் சிலருக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் தென்பட்டுள்ளன.
ஜம்மு-காஷ்மீரை சேர்ந்த 65 வயது முதியவர் கடந்த 26ம் தேதி இறந்தபிறகு தான், மாநாட்டில் பங்கேற்ற பலருக்கு கொரோனா தொற்று பரவிய அபாயம் தெரியவந்தது. இந்த மாநாடு நடந்த நிஜாமுதீன் பங்களாவாலி மசூதியில் 175 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அவர்களுடன் தொடர்பில் இருந்த 2,000 பேர் தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர்.
பின்னர் மாநாட்டில் பங்கேற்ற, தமிழகம், தெலுங்கானா, கேரளா, மேற்குவங்கம் மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு தொடர்பில் இருப்பவர்களும் பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டனர். இதில், 20 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. 1000 பேர் தொற்று அறிகுறியுடன் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
தப்லிகி ஜமாஅத்தின் தலைமையகம்
தெற்கு டில்லியின் நிஜாமுதீன் மேற்கு பகுதியில் உள்ள சூபி துறவி நிஜாமுதீன் ஆலியா மற்றும் காலிப் அகாடமியின் தர்காவுக்கு அருகில் பாங்லேவாலி மசூதி என்று அழைக்கப்படும் நான்கு மாடி கட்டடம் அமைந்துள்ளது. குறுகிய இரும்பு நுழைவு வாயிலை கொண்ட உயரமான கட்டடமாக உள்ளது. அங்கு மக்கள் ஒன்றுக்கூடும் மத சொற்பொழிவு அறை, ஒரு பெரிய சமையலறை மற்றும் ஷூ ரேக்குகளும் கொண்டதாக உள்ளன.
முதல் மாடியில் ஆயிரக்கணக்கான மக்கள் அமரும் வகையில் பெரிய மண்டபம் அமைந்துள்ளது. நேற்றும் (மார்ச் 30) அங்கு கிட்டத்தட்ட ஆயிரம் பேர் இருந்ததாக கூறப்படுகிறது. அதில் பலர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.